செவ்வாய், 12 ஏப்ரல், 2011

வள்ளுவரும் வாழ்வியலும்


"வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு"
என்ற பாரதியின் வரி தமிழ் மக்கள் மனதில் மிக ஆழமாக பதிந்த ஒன்று. ஒரு தத்துவத்தின் வழி வாழ்ந்து வந்தால், அது வாழ்வியலாகிறது. இத்தகைய வாழ்வியல் நெறிகள் பலவற்றை வள்ளுவர் குறிப்பிட்டுள்ளார். அவற்றுள் சிலவற்றை இங்கு காண்போம்.
  • அறத்தான் வருவதே இன்பம்:
 ‍‍மனிதன் வாழ்வாங்கு வாழ அறத்தினை மேற்கொள்ள வேண்டும் என்பதை வள்ளுவர் திறம்பட பதிவு செய்கிறார்.
"சிறப்புடை மரபின் பொருளும் இன்பமும் 
அறத்துவழி படூஉம் தோற்றம்   போல"
என்ற புறநானூற்று வரியின் மூலம் அறத்தின் சிறப்பியல்பை அறியலாம். மனதில் மாசற்று, இனிமையாக, உள்ளம் மகிழ இனியச் சொல் பேசுவதே அறம் என்பதை,
"முகத்தான் அமர்ந்து இனிதுநோக்கி அகத்தானாம்
 இன்சொலி னதே அறம்"
 என்கிறார்.
பொறாமை, ஆசை, கோபம், கடுஞ்சொல் ஆகியவை இல்லாமல் செய்கிற காரியங்களே அறமுடையது என்கிறார். இவையின்றி செய்வது மட்டுமே அறமன்று.  பற்றுக்களை விட்டொழிக்கும் 'துறவறம்', மனைவி மக்களோடு குடும்பம் நடத்தும் 'இல்லறம்',ஆகியவையும் அறமே. இதை,
"அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை"
என்கிறார் வள்ளுவர்.
  •  அன்பின் வழியது உயிர்நிலை:
வாழ்க்கைக்கு செழிப்பு உண்டாக்குவது அன்பு தான். உலக உயிர்களெல்லாம் மாட்சி பெறுவது அன்பு என்னும் நற்பண்பினால் தான்.
"அன்பிற்கும் உண்டோ அடைக்குந் தாழ்"
"அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு" 
போன்ற வரிகளால் அன்பின் ஆழத்தையும், சிறப்பையும் உணர்த்துகிறார் வள்ளுவர். "அருள் என்னும் அன்பீன் குழவிபொருள்..." என்ற வரியின் மூலம் அன்புடையவன் அருள் பெறுகின்றான் என்கிறது வள்ளுவம். இக் கருத்தை பலரும் எடுத்துரைத்து உள்ளனர். அவர்களுள் 'திருமூலர்',
"அருள்கண் இலாதார்க் கரும்பொருள் தோன்றா 
அருள்கண் உளோர்க்கெதிர் தோன்றும் அரணே..."
என அருள் பெறுவதின் சிறப்பியல்பை அழகாக எடுத்துரைக்கிறார்.
  • பண்பு பாராட்டும் உலகு:
ஒருவனிடம் பண்பு என்னும் நலம் இருப்பின் அவனே அன்புடையவனாகவும், நல்ல குடியில் பிறந்தவனாகவும் கருதப்படுகிறான்.
"பணிவு உடையன் இன் சொலன்"
ஒழுக்கம், உதவி புரிதல், இனிமையாக பேசுதல் என்பனவற்றை மனிதனின் வாழ்வியல் சார்ந்த நற்பண்புகளாம். இது போன்ற பண்புகள் இல்லாதவர் அறிவு மிக்கவராக இருப்பினும் அவர் மரம் போன்றவரே என்பதை,
"அரம்போலும் கூர்மையரேனும் மரம் போல்வர்
மக்கட் பண்பு இல்லாதவர்" 
எனக் கூறுகிறார் வள்ளுவர்.
  • தன்னையே கொல்லும் சினம்:
கோபமானது இன்பத்தை உடனே அழித்து துன்பத்தை தான் தரும். கோபத்தால் என்றும், எந்நிலையிலும் இலாபம் நேரப்போவதில்லை. இதனை நன்கு அறிந்து வள்ளுவர் வெகுளாமை என்னும் அதிகாரத்தை திறம்பட வகுத்துள்ளார்.
கோபத்தின் குரூரத்தை,
"கோட வாள்முகம் சுழித்துஇதழ் 
      மடித்துஎழில் குலையச்
சேடன் மீதியான் சினமுற்ற 
     பொழுது எதிர்திகழும் 
ஆடிநோக்க யானியான் கொல்மற்று
       ஆர்கொல் என்றயிர்த்துத் 
தேடிநோக்க ஓர் குரூபமே
     கண்டு உளந் திகைத்தேன்"
என நீதிநூல் விளக்குகிறது. இத்தகைய இன்னா செய்யும் கோபத்தை மனதாலும் நினைக்காதவன்,
"உள்ளிய எல்லாம் உடன் எய்தும்" என்கிறார் தெய்வப் புலவர்.
  • மடியை மடியா ஒழுகல்:
உள்ளத்தில் ஊக்கம் இருந்தும் உடலின் சோம்பலால் வாழ்க்கை திசை மாறி போவதுண்டு. ஆதலால் ஊக்கத்தை உழைப்பில் செலுத்துதல் வேண்டும்.
அவ்வாறு ஒருவன் சோம்பலை தவிர்த்து ஒழித்து அயராது உழைத்தால் அவனது குடிக்கு வந்த துன்பம் அனைத்தும் அகன்று விடும் என்பதை,
"குடி ஆண்மையுள் வந்தகுற்றம் ஒருவன்
மடி ஆண்மை மாற்ற கெடும்"
என்னும் குறளில் அழகாக இயம்புகிறார் வள்ளுவர்.
  • ஒருபால் கோடாமை சான்றோர்க்கு அணி:
துலாப்பாரத்தில் உள்ள கோல் போல ஒரு பக்கமாக சாய்ந்துவிடாமல்  நடுவுநிலைமையோடு இருப்பதே மேன்மக்களுக்கு அழகு.
"கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம் 
நடுவுஒரீஇ அல்ல செயின்"
என்ற குறளில் ஒருவன் நடுவுநிலைமை தவறி செயல்பட்டால் அவனது மனசாட்சியே அவனை உறுத்தும் என்கிறார். ஆக பிறருடைய வழக்கையும் தம்முடைய வழக்காக எண்ணி நேர்மை கோணாமல் சீர் தூக்கி செய்வது தான் நடுவுநிலைமையின் சிறப்பு.
  • அகந்தூய்மை வாய்மையான் காணப்படும்:
 எல்லா ஒழுக்க நெறிகளுக்கும் நற்பண்புகளுக்கும் வாயில் - வாய்மை. யாருக்கும் எந்த வகையிலும் தீமைத் தராத வார்த்தைகளைப் பேசுவதே வாய்மையறம். மேலும் நன்மையை ஏற்படுத்தும் பொய்யும் வாய்மையே என்கிறார் வள்ளுவர்.
வாழ்வில் சிறக்க அறிவில் உயர்ந்தவர்களுக்கு வழிக் காட்டுவது வாய்மை என்னும் ஒழி விளக்கே.
"எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
  பொய்யா விளக்கே விளக்கு"
பொய்யாமையே உயர்ந்த ஒப்பற்ற வாழ்வியலுக்கேற்ற விளக்கு எனக் கூறுகிறார் பொய்யா மொழிப் புலவர். 
  • பொறையுடைமை போற்றி ஒழுகப்படும்:
ஒருவன் மிகப் பெரிய தீங்கிழைத்தால் நாமும் அதற்காக அறிவிழந்து திரும்பி தீங்கு செய்தல் கூடாது. இவ்விதம் செயல்பட்டால் தான் வாழ்வில் கொஞ்சமாவது அமைதி நிலவும்.
"அகழ்வாராய் தாங்கும் நிலம் போல தம்மை
இகழ்வாரை பொறுத்தல் தலை"
தம்மை இகழ்ந்தவர்களையும் மன்னித்து பொறுமையாக இருப்பதே தலையாய பண்பு என்கிறார் வள்ளுவர்.
இவை மட்டுமின்றி வாழ்வியல் நெறியின் தலைசிறந்ததை பின் வரும் குறளில் வள்ளுவர் இயம்புகிறார்,
"பகுத்துண்டு பல்உயிர் ஓம்புதல் நூலோர் 
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை"
தனது உணவை பங்கிட்டு பிறருக்கு அளித்து வாழும் பண்பே உலகின் சிறப்பு மிக்க வாழ்வியல் நெறியாம்.
இவ்வாறு பல பல வாழ்வியல் நெறிக் கூறும் கோட்பாடுகளைத் தன நூலில் வகுத்து தந்துள்ளார். இக் காரணத்தால் தான் திருக்குறளை உலகப் பொதுமறை என்றும் வள்ளுவரை பொய்யாமொழிப் புலவர் என்றும் கூறுகின்றனர். உலகின் அனைத்து மக்களும் போற்றி ஏற்கக் கூடிய ஓர் இலக்கியம் தமிழில் எழுதப்பட்டிருப்பது நம் மொழிக்கும் நமக்கும் சிறப்பானது.

1 கருத்து: